வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக தமிழர் தாயகப் பகுதிகள் பாதிப்பு
வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக தமிழர் தாயகப் பகுதியான கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை ஒய்ந்திருந்த போதிலும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது.
நேற்று இரவு தொடக்கம் பெய்து வரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நில பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மட்டக்களப்பு நகரிலுள்ள பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வெள்ளம் காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து செய்வதிலும் அவர்கள் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுளளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
டந்த மூன்று தினங்கள் பெய்த தொடர் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.