மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தடை விதிக்க ஓடித்திரியும் காவல்துறையினர்! சட்டத்தரணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடைவிதிக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள் இந்த விடயத்தை சவாலுக்கு உட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan) தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொதுவெளிக்கு வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் தினம். அதேபோல மே 18ஆம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்ற நிலையில், கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு முதல் நாள் சடுதியாக ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தியை கொண்டுவந்தார்கள்.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டால் ஒரு கிழமை, முன்றுநாள், ஐந்து நாள் என்று சென்ற நிலையில் உடினடியாக அதன் முடிவுகளை கூறி கொத்தணி உருவாகுவது போல் மாயையை உருவாக்கினர்.
எங்களுடைய நிகழ்வுகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற பொழுது கொரோனாவை சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் பழிவாங்குகின்ற அல்லது குரல்வளைகளை நெரிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள்.
கடந்த மாவீரர் தினத்திலும் இவ்வாறு நீதிமன்ற தடைகளை எடுக்கப்பட்டிருந்தது.
இம்முறையும் காவல்துறை உத்தியோகத்தர்கள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள் இந்த விடயத்தை சவாலுக்கு உட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும்.
அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்க வேண்டிய வேளை வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும்.
உண்மையில் சுமந்திரனுடைய சட்டம், சட்ட புலமை தமிழ் மக்களிற்கு பயன்பட்டதாக இல்லை. வெறுமனே வீட்டுக்குள் கொழுத்துவதென்பது பொருத்தமானதல்ல. நாங்கள் சொல்லாவிடினும் வீடுகளில் மாவீரர்களை நினைந்து அவர்கள் விளக்கேற்றத்தான் போகின்றார்கள்.
ஆனால், உலகிற்கு சொல்வதற்கு ஒரு பொது வெளியில் வரவேண்டும். சகல கட்சிகளிலும் சட்டத்தரணிகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.
இந்த முறையாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிற்குள் பேசி இந்த விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பொழுது தேவையாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவிதுள்ளார்.