மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிப்பு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி வரை தடையை நீடிக்குமாறு இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் (Chandrika Kumaratunga) சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சந்திரிக்கா தாக்கல் செய்த மனு
இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் பதில் மனுதாரர்கள் தாக்கல் செய்வதற்கும், வழக்கை வரும் 29ஆம் திகதி மீண்டும் அழைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சிரேஷ்ட உப அதிபர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva), உப தலைவர் பைசர் முஸ்தபா (Faiszer Musthapha) உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை கட்சியின் அரசியலமைப்புக்கு முரணானது எனவும், அவர் அந்தப் பதவியை வகிப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மனு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |