திருகோணமலையில் மறுக்கப்பட்ட நினைவுகூரும் உரிமை: கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்
திருகோணமலை (Trincomalee) - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை காவல்துறையினரின் அத்துமீறலை கண்டிப்பதாக கிழக்கு பலக்லைக்கழக (Eastern University, Sri Lanka) கலை மற்றும் கலாசார பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பகிர்ந்து நினைவுகூர்ந்ததற்காக நால்வரைக் காவல்துறையினர் கைது செய்தமை குறித்து வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாக ”உரிமையை வேண்டி போராடிய ஒரு இனத்தின் மீது, சர்வதேச நாடுகளை தவறாக வழி நடாத்தி இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இனவழிப்பினால், இறுதி எட்டு மாதங்களில் 146,679 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர்.
15 ஆண்டுகள் கழிந்தும் நீதி கிடைக்கவில்லை
அந்தவகையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கொன்றொழிக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், அப்பாவி பொதுமக்களுக்கு 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசினாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில் இலங்கை அரசினாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூறும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூறும் முகமாக ஞாயிற்றுக்கிழமை (12.05.2024) திருகோணமலை, சம்பூர் - சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நால்வர் கைது
அந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40) பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை சர்வதேசம் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |