பங்களாதேஷ் தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
பங்களாதேஷில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்தானது இன்றையதினம் (23) இடம் பெற்றுள்ளது.
பங்களாதேஷ் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவடத்தில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் தொடருந்தும் பொருட்கள் ஏற்றி வந்த மற்றொரு தொடருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகின.
மாற்று தண்டவாள பாதை
இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் தொடருந்தானது புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றப்பட்டு இருந்தது.
இவ்வாறு மாற்றப்பட்டு கொண்டிருக்கும் போதே நேருக்கு நேர் இரு தொடருந்துகளும் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் எக்ஸ்பிரஸ் தொடருந்தின் பெட்டிகள் தடம்புரண்டுள்ள நிலையில் இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீட்பு பணிகள்
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் அதேவேளை பலியாகியோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.