பசிலுக்கு இராஜாங்க அமைச்சர் புகழாரம்
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச கோட்டாபய - மஹிந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட நாளிலேயே நாடாளுமன்றம் வந்திருந்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டிருக்குமென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
பஷில் ராஜபக்ச நாடாளுன்றம் வருவதை மேலும் தாமதப்படுத்தக்கூடாது என்பதே தமது கருத்து என்று அவர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறினார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், பலரும் பஸில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற மீள்வருகை பற்றி பேசுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சினை கிடையாது.
பஷில் ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டுமுதல் 2007ஆம் ஆண்டில் பதவிகளை ஏற்கவில்லை. ஆனால் போரின் உச்சகட்டத்தில் உணவளித்தல், சுகாதாரம் உட்பட பல விடயங்களை நிர்வகித்துள்ளார். யுத்தத்தின் பின், வடக்கு, கிழக்கில் 200 பாடசாலைகளை புதிதாக நிர்மாணித்தார். கிண்ணியாவில் மிகப்பெரிய பாலத்தை நிர்மாணிக்கவும் அவரே வழி வகுத்தார்.
அதனால் அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதை தாமதப்படுத்தியுள்ளார் என்பதே எனது கருத்தாகும். இதற்கு முன்னரே வந்திருந்தால் பிரச்சினைகளுக்கு அவர் தலையிட்டிருக்க முடியும்.
ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தல் முடிந்து 10 மாதங்களின் பின்னரே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். ஒருவர் பதவி விலகினால் அதற்கான வெற்றிடம் காணப்படும்.
அரசியலமப்பின் 43ஆவது பிரிவிற்கமைய ஜனாதிபதிக்கே அமைச்சுக்களை நியமிப்பதற்கான அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் இந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலேயே பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கலாம் என்பதே எனது கருத்தாகும் என்றார்.