அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது : அநுர தரப்பு திட்டவட்டம்
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya) - குடியிருப்பு பகுதியில் இன்று (29.03.2025) தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும்.
அரசியல் கைதி
அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது. நாம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் தான் ஆகியுள்ளது.
ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தாலும் அதனை படிப்படியாக அதற்கான செயன்முறைகள் ஊடாகத் தான் செய்ய முடியும். காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் கைத் தொழிற்சாலைகளை மீள இயங்கு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். வரவு செலவுத் திட்டத்தில் கூட முன்னைய அரசாங்கங்கள் ஒதுக்காத அளவு அதிக நிதியை நாம் வடக்கிற்கு ஒதுக்கியுள்ளோம்.
வதை முகாம்கள்
1980 ஆம் ஆண்டு காலப் பகுதியல் படலந்த வதை முகாம் மாதிரி பல வதை முகாம்கள் இருந்தன.
தெற்கில் ஜேவிபி, யுஎன்பி பிரிந்து இருந்தது போன்று, வடக்கில் எல்ரீரீஈ, ஈபிடிபி, ஈபிஆர்எல்எப், என பிரிந்து செயற்பட்டு இருந்தார்கள்.
வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எல்லாப் பிரச்சனைகளையும் உடனடியாக விசாரிக்க முடியாது. படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
