ரிஷாட் கைது விவகாரம்- ஓட்டமாவடி பிரதேச சபையில் அமளிதுமளி!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீனின் கைது அநியாயமானதென வலியுறுத்தி அவரை விடுதலை செய்யுமாறு கோரி கண்டனப் பிரேரணை ஓட்டமாவடி பிரதேச சபையின் அமர்வில் நிறைவேற்றப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் 37வது சபை அமர்வு சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலான சுயேட்சைக்குழு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவியினால் இப்பிரேரணை முன்வைத்து உரையாற்றப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிலவுகிற இச்சபையில் தம் தலைவரின் கைதுக்கு எதிராக எக்கண்டனமும் தெரிவிக்கப்படாத நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவியினால் இப்பிரேரணை முன்வைத்து உரையாற்றப்பட்டமை கட்சி வேறுபாடுகளுக்கப்பால் புதிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த சபை அமர்வின் போது கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரரேரனைகள் தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றதுடன், அமர்வில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்களை கூட்டக் குறிப்பில் எழுத்தப்படவில்லை என்ற பிரதிவாதங்களும் இடம்பெற்றது. அத்தோடு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமித் மௌலவி, ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆகியோர் இச்சபையின் குழப்பவாதிகள் என கூறியதன் பிற்பாடு சபையில் அமளிதுமளி இடம்பெற்றது.






