மயிலத்த மடு மேய்ச்சல் தரை விவகாரம்- பிரசன்னமாகாத பிரதிவாதிகள்!
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சார்பாக வாதாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு விசாரணை முடிவுற்றதன் பின்னர் அவர் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாதவனை மயிலத்த மடு மேய்ச்சல் தரை வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளபட்டது.
இதன் போது பிரதிவாதங்களில் ஒருவர் மாத்திரம் பிரசன்னமாகி இருந்தார்.
இந்நிலையில், பால் பண்ணையாளர்களின் கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை, மகாவலி அபிவருத்தி சபையினாலும், வேறு அரச நிறுவனங்களினாலும், வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளை கொண்டு வந்து சோளம் பயிர்ச்செய்கைக்காகவும் கொடுக்கபட்டதனை தடுக்க வேண்டும் எனவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது ஏனைய ஐந்து பிரதிவாதிகள் பிரசன்னமாகி இருக்கவில்லை. இதன் காரணமாக மீண்டும் அவர்களுக்கு அறிவித்தல் கொடுத்து பெப்ரவரி 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேய்ச்சல் தரை சம்பந்தமான அனைத்து விடயங்களும் இந்த வழக்கின் போது சரியான உத்தரவுகளை பெற்று தீர்த்துக் கொள்ளலாம் என நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது மனுதாரர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.
மயிலத்த மடு பண்ணையார்கள் சார்பான வழக்காளிகளாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரம் இருவரையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் 13 திகதி மேய்ச்சல் தரை சம்பந்தமான மாதவனை மயிலத்தை மடு பிரதேத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.