வங்காள விரிகுடாவில் அதிகரிக்கும் கடல் கொந்தளிப்பு! விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகரிக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிலை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மறு அறிவிப்பு வரும் வரை பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின், பேரிடர் மேலாண்மை மையத்தால் நேற்று இரவு 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, அடுத்த 12 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்லும் பல நாள் பயணப் படகுகளுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுநிலை
வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி,
“மேற்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, மாலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக வலுப்பெற்றது.
இந்தப் புயல் அமைப்பு தனது தீவிரத்தை தக்கவைத்துக்கொண்டு மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், வடக்கு ஆந்திரப் பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 கி.மீ. வரை எட்டக்கூடும். அத்துடன், பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடலும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பலத்த காற்று
இதற்கிடையில், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மணிக்கு 55–65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.
மறு அறிவிப்பு வரும் வரை, 07°வடக்கு முதல் 22°வடக்கு அட்சரேகை வரையிலும், 83°கிழக்கு முதல் 95°கிழக்கு தீர்க்கரேகை வரையிலும் உள்ள கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என கடற்படை எச்சரித்துள்ளது.
குறித்த கடற்பரப்பில் ஏற்கனவே உள்ள தொழிலாளர்கள் , அப்பகுதியை விட்டு விலகிச் செல்லுமாறும், வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளையும் அறிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து, விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

