இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! கவலை வெளியிட்டுள்ள கலையரசன் எம்.பி
தமிழர்களை அடக்கி சிங்கள மக்களை திருப்திப்படுத்தவே அரசு முனைகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இந்நாட்டில் இருக்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பார்க்கின்ற போது தமிழ் மக்கள் இந் நாட்டில் வாழலாமா என்ற ஐயப்பாடு எழுகின்றது.
ஏன் எனெனில் உலகநாடுகள் அனைத்தும் உலகம் பூராகவும் தீவிரமடைந்து வரும் கொரோனா நோயினை எவ்வாறு ஒழிக்கலாம் என்று அல்லும் பகலுமாக உழைத்து கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில், இலங்கை அரசு மாத்திரம் வடகிழக்கு பிரதேசங்களில் எவ்வாறு தமிழர்களை அடக்க முடியும்.
தமிழர்களுடைய நிலங்களை எவ்வாறு ஆக்கிரமிக்க முடியும் என்ற வகையில் தான் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
இச் செயற்பாடுகள் நாட்டில் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது.
மாறாக தமிழர்களின் நிலங்களை எவ்வாறு கையகப்படுத்தலாம் ,தமிழர்களை அவர்களது பூர்வீக இல்லங்களில் எவ்வாறு இருந்து வெளியேற்றலாம் என்ற திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இவை நிறுத்தப்பட வேண்டும். இன்று நேற்றல்ல அறுபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் சொல்லமுடியாத விடயங்களை தொடர்ச்சியாக அனுபவித்த தமிழர்களின் வாழ்விடங்களை அகற்றுவதற்கும், ஆலயங்களை கையகப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனிதர்கள் மாத்திரமல்ல - கால்நடைகள் கூட இலங்கையில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மயிலத்தமடு மேச்சல் தரையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் கூட ஈவிரக்கமற்ற முறையில் அண்மைக் காலமாக கொல்லப்படுகின்றது.
இவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் அரசு அராஜகமாக செயற்படுகிறது.
தற்போது அரசியல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வரும் இந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு இவ்வாறான நிலை எமது அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது
என்ற விடயங்களை சொல்லி பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் தமக்கான ஆதரவினை பெருக்கிக் கொள்ள முனைகின்றதா என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.
இந்த அரசாங்கம் இவ்வாறான விடயங்களை நிறுத்தி, சமத்துவமான முறையில் மக்களை ஒன்றிணைக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபைகள் கூட இலங்கை அரசை மிக வன்மையாக கண்டித்துள்ளது. இந் நிலை தொடருமானால் நாட்டில் மிக மோசமான சூழல் ஏற்படும் எனத் தெரிவித்தார்.