சட்டத்தரணிகள் முன்னிலையாக வேண்டாம்! மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பெண்ணுக்காக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்யப்பட்ட தாய்க்கு நீதி கோரியும் சட்டத்தரணிகளை கொலைக்கார கும்பலுக்கு சார்பாக முன்னிலையாக வேண்டாம் என ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27.03.2026) காலையில் மட்டு காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆர்பாட்டம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களுக்கு அழைப்பு
கடந்த 20 ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வெல்லாவெளி 40ம் கிராமத்தை சேர்ந்த நளாயினி ரவி என்ற 48 வயதுடைய பெண்ணுக்கு நீதி கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 8.30 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது “கொலை செய்யப்பட்ட தாய்க்கு நீதி வேண்டும். கைது செய்யப்பட்ட கொலை கும்பலுக்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலைப்படுத்த கூடாது. பெண்களின் சுதந்திரம் கயவர்கள் கையில் எனில் நீதி எங்கே போய்விட்டது, மனித நேயமற்ற கொலைகார கும்பலை தூக்கில் இடு, நளாயினியின் கொலைக்கு நீதி கொடு, கிணற்றில் வீசிய கயவர்களுக்கு என்னதான் தண்டனை, நளாயினி நகை அணிந்தது குற்றமா?, எங்கள் கிராமத்தின் தாயின் சடலத்தை திருப்பி கொடு, குற்றவாளிகளுக்கு உடன் தண்டனை கொடு, கொலையாளிகளுக்கு துணை போகாதீர்கள், நீதி சாகக்கூடாது,” என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் மனுவை கையளித்தனர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகாரர்கள் நீதிமன்ற வீதி சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து பழைய கச்சேரிக்கு சென்றுள்ளனர்.
கச்சேரியில் இன்று இடம்பெற்றுவரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தையடுத்து கச்சேரி வாசலில் காவல் துறையினர் பேருந்து வண்டியை குறுக்கே நிறுத்தி ஆர்ப்பாட்டகாரர்களை உட்செல்ல விடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்ட ஆர்ப்பாட்டகார்களிடம் சென்ற அரசாங்க அதிபரிடம் ஆர்ப்பாட்டகாரர்கள் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
அதன்பின்னர், நீதி கோரி கையளித்த மக்களின் மனுவிற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்த பின்னரே ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
[2SYP23S ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |