மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று நடைபெறுகிறது.
மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.
சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றம்
பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள் நடத்தி வைத்த நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இடம்பெற, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது.

மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தீர்த்த உற்சவப் பெருவிழா ஆடி அமாவாசை தினத்தன்று (12) திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


