மட்டக்களப்பில் துடுப்பாட்ட மட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: அசத்தும் தமிழ் இளைஞன்
மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் மென்பந்து கிரிக்கெட் விளையாட்டிற்கான துடுப்பாட்ட மட்டையை (cricket bat) தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றார்.
உதயகுமார் நிதர்சன் என்ற 30 வயதுடைய தமிழ் இளைஞனே தனது திறமையை உலகறிய செய்து சாதனை படைக்கின்றார்.
மட்டக்களப்பு செங்கலடி - கொம்மாதுறை பகுதியை சேர்ந்த உதயகுமார் நிதர்சன் விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ளவர். இவர் சுமார் 07 வருடங்களாக விளையாட்டு துறை சார்ந்து , துடுப்பாட்ட மட்டை , விக்கட் , மரத்தினால் ஆன நினைவுச் சின்னங்கள் , உள்ளிட்ட விளையாட்டுடன் தொடர்புடைய உபகரணங்களை மரத்தினால் செய்து வருகின்றார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
காலப்போக்கில் அந்த முயற்சியால் இன்று தான் தயாரிக்கும் துடுப்பாட்ட மட்டை நாடு கடந்து சர்வதேசம் வரை செல்வதாக தெரிவிக்கின்றார்.
ஓரிரு துடுப்பாட்ட மட்டை தயாரித்தவையை தற்போது ஆயிரக்க கணக்கில் தயாரித்து பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மாறியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
தற்போதும் பாகிஸ்தான் நாட்டில் இருந்த வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள், சுமார் 6ஆயிரம் கிரிக்கெட் மட்டையை குறித்த இளைஞரிடம் செய்து தருமாறு தெரிவித்து அதை எடுத்துச் செல்ல அங்கேயே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலருக்கு வேலைவாய்ப்பு
அதுமட்டுமன்றி பாகிஸ்தான், ஜேர்மனி, இந்தியா, கனடா ஆகிய பல நாடுகளுக்கு இவரது உற்பத்திகள் செல்கின்றதாகவும் தெரிவிக்கின்றார்.
இந்த வேலைத்திட்டத்தில் தனது சகோதரர்கள் இருவர் உட்பட ஏழு பேர் வேலை செய்வதாகவும், மட்டக்களப்பில் இவ்வாறு தயாரிப்பது முதல் தடவை என்பதுடன் , போதிய வளம் இருப்பின் இதனை மேலும் மேம்படுத்தி பலருக்கு வேலைவாய்ப்பை தன்னால் வழங்க முடியும் என்பதுடன், ஏற்றுமதியையும் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |