மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12ஆவது நாளாகவும் இன்றைய தினம் (13) கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
அத்தோடு, ஏனைய மாவட்டங்களை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளால் தமது தொழில் நியமனத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்தநிலையில், பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்,கல்வி கொடுத்த அரசே கொள்ளி வைக்கலாமா?,அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, வருடங்கள் போக போக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |