நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து!
இலங்கையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மின் தடை காரணமாக சுமார் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர் பொறுப்பேற்க வேண்டுமென இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது.
மின் தடையால் ஏற்பட்ட நஷ்டம்
இதனால் ஆயிரத்து 505 மில்லியன் ரூபா நஷ்டத்தை அரசாங்கம் எதிர்நோக்கியிருந்தது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது.
இதனடிப்படையில், குறித்த மின்சார தடைக்கு இலங்கை மின்சார சபையே காரணமென தெரிவிக்கப்பட்டது.
பரிந்துரைகள்
இதையடுத்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் 7 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், குறித்த பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
குறித்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதை போன்ற மின்சார தடை நாட்டில் ஏற்பட்டிருக்காது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பு
குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதைய சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டிய சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, தற்போது சுயநலமாக செயல்படுகிறது.
இந்த ஆணைக்குழு மின் கட்டண அதிகரிப்பு மற்றும் குறைப்பு ஆகிய நடவடிக்கைகளில் சுயாதீனமாக செயல்படுவதை போன்று குறித்த மின் தடை தொடர்பிலும் சுயாதீனமாக செயல்பட வேண்டுமென நான் கோருகிறேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |