பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை!
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம், கடந்த 2021 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று குறித்த வழக்கிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அஹ்னாப் ஜெஸீம் மீதான குற்றச்சாட்டு
சிறுவர்களுக்கு தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவித்ததாகவும், அவரது இலக்கியப் பணியின் மூலம் தீவிரவாதத்துக்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
'நவரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜெஸீமுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
சேவ் த பேர்ள் அமைப்பு
சேவ் த பேர்ள் எனப்படும் முத்துக்களை காப்பாற்றுவோம் சிறுவர் அமைப்புனுடன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தமக்கு தொடர்பிருந்ததாக ஒப்புக் கொள்ளுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |