இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின்
புதிய இணைப்பு
போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
போதைப்பொருளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகொன்று, 4 சந்தே நபர்களுடன் திக்கோவிட்ட துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற குறித்த படகு நேற்று (16) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
இந்த நிலையில் படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முழுமையாக சோதனை
குறித்த படகை கடற்படையினரும் காவல்துறையினரும் இணைந்து முழுமையாக சோதனையிட்ட போதே, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த அளவை துல்லியமாக கணக்கிடுவதற்காக, அவற்றை எடையிடும் பணிகள் துறைமுக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |