இலங்கையின் உயர் கல்வித் துறையில் பாரிய முன்னேற்றம் : வெளியான அறிக்கை
இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக 2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அந்தவகையில் குறிப்பாக கலாநிதி (PhD) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மொத்த உயர்கல்வித் துறையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 2012 ஆம் ஆண்டில் 6,557 ஆக காணப்பட்ட கலாநிதி பட்டதாரிகளின் எண்ணிக்கை, 2024 இல் 11,757 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 0.1 வீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரம்
பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2012 இல் 358,052 (3.0%) ஆக காணப்பட்டதுடன் 2024 இல் 780,958 (5.6%) ஆக அதிகரித்துள்ள நிலையில் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

மூன்றாம் நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களின் எண்ணிக்கை 2,195,117 (18.2%) இலிருந்து 3,635,462 (26.2%) ஆக கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகைமை கொண்டவர்களின் எண்ணிக்கை 1,724,574 (14.2%) இலிருந்து 2,677,022 (19.4%) ஆக அதிகரித்துள்ளது.
முறையான பாடசாலைக் கல்வி
இடைநிலைக் கல்வியைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7,079,569 இலிருந்து 8,096,402 ஆக உயர்ந்துள்ளது. இது இரண்டு காலப்பகுதிகளிலும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 58 சதவீதம் ஆகும்.

ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2,214,792 (18.4%) இலிருந்து 1,738,942 (12.5%) ஆக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் முறையான பாடசாலைக் கல்வியைப் பெறாதவர்களின் எண்ணிக்கை 561,163 (4.7%) இலிருந்து 400,511 (2.9%) ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்தத் தரவுகளின்படி, இலங்கையில் அடிப்படை மற்றும் ஆரம்பக் கல்வி மட்டத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வித் தகைமைகளை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |