நீதிமன்ற சிறைக்குள் உயிரை மாய்த்துக் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தை! தொடரும் விசாரணை
ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் மிச் நகர பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வாச்சுக்குட்டி நெவ்பர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விளக்கமறியலில் உத்தரவு
குறித்த நபரை கடந்த 21 திகதி ஞாயிற்றுக்கிழமை 2400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்து 22ம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
அதன்போது, அவரை இன்று 26 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ தினமான இன்று குறித்த நபருக்கு எதிரான வழக்கில் அவரை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு திறந்த நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.
தடவியல் விசாரணை
திறந்த நீதிமன்ற நடவடிக்கை பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த நபர் காலை 11.50 மணியளவில் சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று ஜன்னல் கம்பியில் தனது சாரத்தை கழற்றி கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன், நீதவானின் அனுமதி பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நபருக்கு எதிராக இரண்டு திருட்டுக்கள் தொடர்பாகவும் இரண்டு போதை பொருள் தொடர்பாக 4 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
