வெளிவந்த பச்சிளம் சிசுவின் எலும்புக்கூடு - ஸ்கான் முடிவுகளின் அறிக்கை விரைவில்
அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் இடம்பெற்ற ஸ்கான் பரிசோதனைகள் தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலதிகமாக புதைகுழிகள் இருக்கின்றனவா என்று அறிவதற்காக தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் (ஜி.பி. ஆர்.) ஸ்கான் செய்யும் நடவடிக்கைகள் இரண்டு தினங்கள் இடம்பெற்றன.
இந்தப் பணிகள் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
எலும்பு கூட்டு தொகுதிகள்
இதேவேளை, செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி யாழ். (Jaffna) நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
