கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜேர்மன் யுவதி
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு (Russian Embassy) அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜேர்மன் (German) நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் இன்று (09) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சந்தேக நபரான இளம்பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை குறித்த பெண் காவல்துறையினருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சந்தேக நபரான இளம்பெண் சீனாவிற்கு (China) தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த வெளிநாட்டு பெண் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு சென்றுள்ள நிலையில் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் மடிக்கணினி ஒன்றை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தார்.
இந்த வெளிநாட்டு பெண் சென்ற சிறிது நேரத்தில் ரஷ்ய தூதரகத்திற்குள் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
