பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மாணவர்களின் போசாக்கு குறைபாடு
இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருக்கின்றோம், தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் இருக்கின்றனர், தோட்ட பாலர் பாடசாலைகளிலிருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்கலாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர்.
அதேபோல் கர்பிணித் தாய்மாருக்கான போசாக்குப் பொதிகளை வழங்க எதிர்பார்த்திருக்கின்றோம், அதற்காக 220,214 கர்பிணித் தாய்மாருக்கு 4,500 பெறுமதியான போசாக்கு பொதிகளை 10 மாதங்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பாலர் பருவகால மேம்பாடு தொடர்பிலான தேசிய செயலாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் 18,333 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
பாலர் பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயினை வழங்கவும், அது போதுமான தொகை இல்லை என்பதால் அதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.
மேலும் அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு 03 புதிய சட்டங்களை கொண்டுவரவிருக்கின்றோம்.
அதற்கமைய, ஆண், பெண் சமத்துவ சட்டம். (Gender Equality Bill) ஊடாக ஆண், பெண் சமத்துவத்தை பாதுகாக்கவும், LGBTIQ ஊடாக ஆண், பெண் சமூக சமத்துவத்தை நிலைப்படுத்தும் சபையொன்றை நிறுவி அதன் கீழ் சமூக சமத்துவ மத்தியஸ்த அதிகாரிகளின் (Gender Focal Point) என்ற அரச நிறுவனத்திற்கான ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருக்கின்றோம்.
பேருந்துகளில் கமரா பொருத்துதல்
அதேபோல் பெண்கள் வெளிநாடு செல்லும் போது குழந்தையின் வயது குறைந்தபட்சம் 5 ஆக கருத்தில் கொள்ளப்படும் என்றும், 05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் எத்தனை தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலக மட்டத்தில் தேடியறியவிருக்கின்றோம்.
அதேபோல் மாகாண ஆளுநர்கள், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் அறிவித்து மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் (CCTV) பொருத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதேபோல் பொது போக்குவரத்து சேவைகளுக்குள் பெண்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகளை ஓரளவு தடுக்கும் எதிர்பார்ப்புடனேயே கமராக்களை பொருத்த எதிர்பார்த்திருக்கின்றோம் அதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் கமராக்களை பொருத்த வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையுடன் அனுமதி பத்திரங்கைளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |