தாய்ப்பால் தானம் - 10 மாதத்தில் 135 லீட்டர் - விருது பெற்ற தாய்!
பிறக்கும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாக தாய்ப்பால் உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில் அதிகமாக உள்ளது.
ஆனால் சில சமயங்களில், பிரசவத்தின் போது தாய் இறப்பது, தாயின் உடல் நலக்குறைவால் தாய் பால் குறைவாக சுரப்பது, அநாதரவாக கைவிடப்படும் குழந்தைகள் இதுபோன்ற பிரச்சனைகளால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதியளவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது.
தாய்ப்பாலுக்கான பிரச்சினையை நிவர்த்தி செய்ய இந்திய அரசினால் தாய்ப்பால் வங்கித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றது.
தாய்ப்பால் தானம்
இந்தநிலையில், இந்தியாவின் கோவை வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா(27) எனும் பெண் சுமார் 10 மாதங்களாக தாய்ப்பாலினை தானமாக வழங்கி வருகின்றார்.
அவருக்கு குழந்தை பிறந்து 5-வது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்யத் தொடங்கியுள்ளதுடன், குறித்த 10 மாதத்தில் 135 லீட்டர் தாய்ப்பாலினை தானமாக வழங்கியுள்ளார்.
தினமும் தனது குழந்தைக்கு வழங்கியது போக, மிகுதி தாய்ப்பாலை அதற்கென வழங்கப்பட்ட பக்கெட்டில் சேகரித்து, பின்னர் அதனை, குளிர்சாதன பெட்டியில் வைப்பதாகவும், அதனை குறிப்பிட்ட சில நாட்களின் பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேகரித்து செல்வதாகவும் குறித்த தாய் கூறியுள்ளார்.
குறித்த தாயிடம் பெறப்பட்ட தாய்ப்பாலினை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரச மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.
விருது
இந்தநிலையில், தாய்ப்பால் தானத்துக்காக 'இந்தியன் புக் ஒப் ரெக்கோர்ட்ஸ் அன்ட் ஆசியன் புக் ஒப் ரெக்கோர்ட்ஸ்' (India Book of Records and Asian Book of Records) சார்பில் அவரைப் பாராட்டி, பாராட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டுள்ளது.

