சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களை திரட்டி சிறிலங்காவை சர்வதேசத்தின் முன் நிறுத்த வேண்டும்!
சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களை திரட்டுவதே எமது மிக முக்கிய நோக்கம் என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதேவேளை எதிர்வரும் 8 ஆம் திகதி சிறிலங்கா தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அம்சங்கள் இடம்பெறமாட்டாது. இருப்பினும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் முக்கிய உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளிவரவுள்ளது.
சாட்சியங்களை திரட்டும் பொறிமுறை
அந்த அறிக்கை தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை என்ன விடயங்களை முன்னெடுக்கவுள்ளது என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிரியாவிற்கும் மியன்மாருக்கும் கொண்டுவந்ததைப் போன்று சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறையை உருவாக்கியுள்ளோம். இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றது என்பது எல்லோருக்கம் தெரியும், ஆனால் அதனை நிரூபிப்பதற்கு, இனஅழிப்பிற்கான ஆதாரங்களைத் திரட்டி சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்குரிய காத்திரமான செயற்பாடுகள் செய்யப்படவில்லை.
எனவே தான் சிதறிக்கிடக்கும் இன அழிப்பு சாட்சியங்களைத் திரட்டுவது மிக முக்கியம் என பிரிரத்தானிய தமிழர் பேரவை கருதுகின்றது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே மியன்மாருக்கு எதிராக இதுபோன்ற தீர்மானம் வந்த போது, நிபுணர்கள், இராஜதந்திரிகள் போன்றோருடன் இது தொடர்பில் பேசி ஆராய்ந்து இது போன்று ஏன் தமிழ் மக்களுக்கான இன அழிப்பு தொடர்பாகவும் கொண்டு வரமுடியாது எனவும் வாதாடினோம் எனவும் தெரிவித்துள்ளார்.