பௌத்த மதத்திற்கு அரசியல் அமைப்பின் படி முன்னுரிமை: ரணில் வலியுறுத்து
பௌத்த மதத்திற்கு அரசியல் அமைப்பின் படி முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார்.
ஹோமாகம கிரிவென்துடுவ பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான விசேட மருத்துவமனையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அங்கங்களான நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியன பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பிலான பொறுப்பினை ஏற்க வேண்டும்.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை
நாட்டில் எந்தவொரு சமயத்தையும் வழிபாடு செய்வதற்கும், பின்பற்றுவதற்கும் பூரண சுதந்திரம் உண்டு. எனினும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்ற விவகாரத்தில் வாதம் செய்ய முடியாது.
அதனை எவரேனும் மாற்றுவதற்கு விரும்பினால் அரசியல் சாசனத்தை மாற்றுமாறு அவ்வாறானவர்களை கோருகிறார்கள்.
நிறைவேற்று அதிகாரம், நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என்பன பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அடிப்படை கோட்பாடுகள்
அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கத் தவறுவது அரசியல் சாசனத்தை மீறும் செயல். மக்கள் ஆணை, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டை பேணுதல் அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகள் ஆகும்.
இந்த கோட்பாடுகளை பாதுகாத்துக் கொண்டே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |