முப்படையினரை குற்றம் சாட்டும் பௌத்த தேரர்!
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் குற்றச்செயல்களும் முப்படையினரின் இயலாமையை பிரதிபலிப்பதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், முப்படையினரை வலுப்படுத்தாது நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாது என கூறியுள்ளார்.
அரசியல் சிறந்த தொழில்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் பாதாளக்குழுக்களை உருவாக்கியது அரசியல்வாதிகள் தான்.
ஒரு குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்படும் நபர், அரசியல்வாதிகளால் விடுவிக்கப்பட்டு, பின்னர் அவர்களது கைப்பொம்மையாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
இலங்கையின் வரலாற்றை திரும்பிப்பார்த்தால், இதற்கான பல சான்றுகள் இருக்கின்றன. லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கொலை குற்றங்களை மேற்கொள்ளவும் தற்போது அரசியல் சிறந்த தொழிலாக காணப்படுகிறது.
யுக்திய வேலைத்திட்டம்
தற்போது இலங்கையில் பாதாளக்குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் யுக்திய எனும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், யுக்திய எனும் வேலைத்திட்டத்தின் படி, உண்மையான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, நாளாந்தம் தொடர் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தாலும், நாட்டில் பதிவாகும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைவடைவதை காணக்கூடியதாக இல்லை.
காவல்துறையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் மந்தபோசன நிலை காரணமாக தற்போது அதிகளவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் கொலைகளும் பதிவாகின்றன.
இந்த நிலையில், முப்படையினரின் ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வியறிவற்ற முட்டாள்கள்
இதேவேளை, இலங்கையை தற்போது ஆட்சி செய்யும் தரப்பினர் கல்வியறிவற்ற முட்டாள்கள்.
கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களின் ஊடாக கல்வியறிவற்ற தரப்பினரை தெரிவு செய்து நான் உள்ளிட்ட மக்கள் தவறான முடிவை மேற்கொண்டுள்ளோம்.
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் ஊடாக குறித்த தவறு சரி செய்யப்பட வேண்டும். கல்வியறிவற்ற தரப்பினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |