சிறுமியை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பௌத்த பிக்கு : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்
அனுராதபுரத்தைச் சேர்ந்த சிறுமி பௌத்த துறவியால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி இன்று (27) யாழ். நல்லூர் ஆலய பின்புறத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது.
பௌத்த துறவிக்கு பிணை
ஆனால் அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறோம்.

சட்டம் அனைவருக்கும் சமமானது மாதத்தின் பெயரால் சட்டத்தை மலினப்படுத்துவதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ யாரும் முயற்சிக்கக் கூடாது.
தெற்கை பொறுத்தவரையில் இந்த சிறுமியின் விவகாரத்தை திசை திருப்பவும் பௌத்த துறவி சம்பந்தப்பட்டதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் குரல் கொடுக்க முன்வராமை கவலை அளிக்கிறது.
மிகவும் கொடூரமான அநீதி
இலங்கையில் சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடூரமான அநீதியாக இந்த பாலியல் அத்துமீறலலை நாங்கள் பார்க்கின்ற நிலையில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தின் நீதி கோரல் தொடர்பில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் ஜனாதிபதி, நீதி அமைச்சர், சட்டமா அதிபர், பெண்கள் மகளிர் விவகார அமைச்சர் மற்றும் காவல்துறைமா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக மகஜரும் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |