அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு
கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை மிகவும் சிரமப்பட்டு பெற்றுக்கொண்ட வெற்றிகளை மாற்றியமைக்க வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பில் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ போராட்டங்களை நடத்துவதில் பிரச்சினை இல்லையெனவும், ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் சுகாதார சட்டங்களுக்கு இணங்குவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார். நாட்டில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த நிலையில் அனைவரும் விழிப்புடன் இருப்பது முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.