இந்தியாவின் தேவைக்காக இலங்கையின் சட்டத்தை மாற்ற முடியுமா : பொங்கியெழும் விமல் வீரவன்ச
இந்தியாவின் தேவைக்கமைய இலங்கையின் சட்டத்தை எவ்வாறு திருத்தம் செய்ய முடியும் எனவும் இந்த திருத்த யோசனைக்கு எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கும் கருத்திட்டத்துக்கு தரவு பாதுகாப்பு சட்டம் தடையாக இருப்பதாக இந்திய நிறுவனம் குறிப்பிட்டதை தொடர்ந்து அந்த சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனையை ஒருமாத காலத்துக்குள் கொண்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்திய நிறுவனத்துக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு அறிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஆளடையாள அட்டை விநியோகம்
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையின் டிஜிட்டல் ஆளடையாள அட்டை விநியோகிக்கும் கருத்திட்டத்தை அரசாங்கம் இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
டிஜிட்டல் அடையாள அட்டை கருத்திட்டத்துக்கான சகல பணிகளையும் தேசிய ஆளடையாள அட்டை திணைக்களம் முன்னெடுத்து அப்பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ள நிலையில் தான் அரசாங்கம் இந்தியாவுக்கு இத்திட்டத்தை வழங்கியுள்ளது.
இந்த கருத்திட்டத்துக்கான விலைமனுகோரலை இந்தியாவின் என்.ஐ.எஸ்.ஜி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த கருத்திட்டத்துக்கு இந்திய நிறுவனம் மாத்திரமே விலைமனுகோரல் செய்ய முடியும்.
இந்தியாவின் தரவு கட்டமைப்பின் வன்பொருள் மற்றும் மென்பொருள் கட்டமைப்பை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கருத்திட்டம் தொடர்பில் இலங்கை தரப்பினருக்கும், இந்திய நிறுவன தரப்பினருக்கும் இடையிலான நிகழ்நிலை முறைமை ஊடாக சந்திப்பு கடந்த மாதம் 25 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
வருண தனபால வாக்குறுதி
இலங்கை சார்பில் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான சஞ்சன கருணாரத்ன (Sanjana Karunaratne), டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகரான ஹான்ஸ் விஜேசூரிய ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால அமைச்சின் செயலாளர் காரியாலயத்தில் இருந்து நிகழ்நிலை முறைமை ஊடாக சந்திப்பில் கலந்து கொள்ளாமல் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு சென்று அங்கிருந்தவாறு குறித்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்குவதில் உள்ள பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் டிஜிட்டல் ஆளடையாள அட்டை உருவாக்கத்துக்கான பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்நிலை காணப்படுவதாக இந்திய நிறுவன பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால (Waruna Sri Dhanapala) இன்னும் ஒன்றரை மாத காலத்துக்குள் தரவு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனை முன்வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தேவைக்கமைய நாட்டின் சட்டத்தை எவ்வாறு திருத்தம் செய்ய முடியும். இந்த திருத்த யோசனைக்கு எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாட்டு மக்கள் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
