கனடாவில் வேலை வாய்ப்பு - காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
கனடா நாடு பெரும்பாலானோரின் விருப்ப நாடாக உள்ளது. இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள் பெருமளவில் அங்கு வசிக்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தாண்டி அந்நாட்டில் நிரந்தர குடியிரிமை பெற்று அதிகளவில் வசிக்கின்றனர்.
கனடா நீண்டகாலமாகவே தங்களது பொருளாதார வளர்ச்சியினை அதிகரிக்க, நிரந்தர குடியிருப்பாளார்களை ஊக்குவித்து வருகின்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து 4 லட்சம் பேருக்கும் மேலாக வெளி நாட்டவர்களை அனுமதித்தது. இந்தநிலையில் கனடா 2025ம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பாக இலக்கு நிர்ணயித்துள்ளது.
வெளிநாட்டவர்களின் தேவை
கனடாவில் ஓய்வுபெறுபவர்களின் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளது. ஆக கனடாவில் வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டவர்களின் தேவை என்பது அதிகளவில் உள்ளது.
அதனை பூர்த்தி செய்ய கனடா வெளி நாட்டவர்களை அதிகளவில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்குள் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் எனும் விகிதத்தில் மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் பேரை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
அதில் 2023ம் ஆண்டில் 4 லட்சத்து 65 ஆயிரம் பேரையும், 2024ல் 4 லட்சத்து 85 ஆயிரம் பேரையும்,
2025ல் 5 லட்சம் பேரையும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் பேரை நாட்டில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
வேலை ஆட்கள் பற்றாக்குறை
வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கனடாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் குறித்து சட்டத்தில் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் தற்காலிகமாக வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, கனடா வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரும் வகையில் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திறந்தநிலை வேலை அனுமதி (Open Work Permit) பெற்ற, கனடாவில் தற்காலிக வேலைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கனடாவில் வேலை செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
திறந்தநிலை வேலை அனுமதி மூலம் ஒருவர் கனடாவில் எந்த நிறுவனத்திலும், எத்தகைய வேலையையும் செய்யலாம்.
தளர்த்தப்பட்ட விதிமுறைகள்
இது குறித்து குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் கூறுகையில், ‘‘ இந்த தளர்த்தப்பட்ட விதிமுறைகளின் படி, பல்வேறு தகுதிகளை உடைய வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பு வழங்கபடும்.
கனடாவில் உள்ள வேலை ஆட்கள் பற்றாக்குறையை இந்த முயற்சி கனிசமாக குறைக்கும். இதன்மூலம் அடுத்த ஆண்டு 2 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையானது வெற்றிகரமாக செயல்படுத்த மூன்று கட்டங்களாக நடைமுறைபடுத்தப்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில், இந்தியர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையாக வேலை செய்து வருகின்றனர்.
இந்த புதிய அறிவிப்பானது கனடா செல்ல காத்திருப்போருக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.