இலங்கை குறித்து கனடாவின் நிலைப்பாடு இதுதான் : வெளிவிவகார அமைச்சர்
கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்கு இலங்கையின் பிரதான நிலை நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், பிளவுபடாத வெளிவிவகார கொள்கையினால் தான் இந்த முன்னேற்றத்தை தம்மால் அடைய முடிந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்துரைக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபை
“தமிழர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படும் நிலையில் பிரிவினைவாதம் தோற்றம் பெறுவதையும் தடுக்க வேண்டும்.
ஆகையால் எம்மால் இரு முனைகளில் இருந்துக் கொண்டு செயற்பட முடியாது. எனவே, ஒருமித்த நாட்டுக்குள் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்படும்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கமாக செயற்படுகிறோம்.நாட்டின் சுயாதீனத் தன்மையை விட்டுக் கொடுத்து செயற்படவில்லை. அதேபோல் பிற நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய நாட்டை நிர்வகிக்கப் போவதில்லை.
சீனா, இந்தியா, அமெரிக்கா, மேற்குலக நாடுகள் உட்பட சகல நாடுளுடனும் இணக்கமாக செயற்படுகிறோம். எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.
கடன் மறுசீரமைப்பு
கனடா மாத்திரம் இலங்கையின் விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா, இந்தியா உட்பட பரிஸ் கிளப் நாடுகள் ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கும் சாத்தியமுள்ளது.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |