தமிழர்களின் குரல்களை ஒடுக்க விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்று விடுங்கள் : பிரம்டன் நகரமேயர் சூளுரை
இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடுங்கள் என பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்திருப்பதுடன் அதற்கான பிரகடனத்தை பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுன் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். அதற்கமைய நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தமிழீழத் தேசியக்கொடி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பிரம்டன் நகரில் நடாத்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள்
அதன்படி உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரம்டன் நகரில் நடாத்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுன் உரை நிகழ்த்தியதன் பின்னர் புலிக்கொடியை ஏற்றிவைத்தார். அவர் தனது உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது.
தமிழ் மக்களுடன் உடன்நிற்கின்றது
தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கும், அவர்களது குரல்கள் நசுக்கப்படுவதற்கும் மத்தியில் பிரம்டன் நகரம் தமிழ் மக்களுடன் உடன்நிற்கின்றது. தமிழர்கள் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதுடன் பல்வேறு வகையிலும் உயிரச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தனர். இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு, நாம் வாழும் காலத்தில் பதிவான மிகமோசமான மனிதப்பேரவலமாகும்.

ஆனால் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அழிப்பதற்கான பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தத் தமிழீழக்கொடி ஏற்றப்படுவதானது தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பான உண்மைகள், அவர்களது கலாசாரம், அடையாளங்கள் என்பன அழிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதைக் காண்பிக்கும் குறியீடாகும்.
தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு
அதேபோன்று உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியே போதியளவு பேசப்படவேண்டும். இந்த இனவழிப்புக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அதிலிருந்து தப்பிவிடலாம் எனக் கருதினால், அவ்வாறு தப்பிக்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் கூறுகின்ற பதிலாகும்.

எமது நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக அரசாங்கத்தின் (இலங்கை) அடிவருடிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தகைய செயற்பாடுகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். அதுமாத்திரமன்றி இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது.
கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாம்
இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாம். அதேவேளை தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம், தமிழின அழிப்பு நினைவுத்தூபி, தமிழீழத் தேசியக்கொடிக்கான அங்கீகாரம் என்பன உள்ளடங்கலாக இவ்விடயத்தில் எட்டப்பட்டிருக்கும் கணிசமாளனவு முன்னேற்றம் வரவேற்கத்தக்கதாகும்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர் விவகாரம் பலரது அவதானத்தைப் பெறும். அத்தோடு வலிமையுடனும், மீண்டெழும் தன்மையுடனும் தொடர்ந்து குரல் எழுப்பும் பிரம்டன் மற்றும் கனேடிய தமிழ் மக்கள் குறித்துப் பெருமையடைவதுடன் நாம் தமிழீழ மக்களுடன் என்றும் உடன்நிற்போம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |