இலங்கைக்குள் போலி புற்று நோய் மருந்து : பாவனையில் இருந்து நீக்க நடவடிக்கை
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்குள் புற்று நோய் மருந்தொன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னரும் இதேபோல் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்குள் Immunoglobulin மருந்தை வழங்கிய விநியோகஸ்தரே இப்பொழுதும் இந்த புற்று நோய் மருந்தை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உடனடியாக குறித்த மருந்துகள் அனைத்தையும் பாவனையில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
போலி ஆவணங்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
உள்ளூர் விநியோக நிறுவனமான Isolez Biotech Pharma Ag Ltd மூலமாகவே இந்த புற்றுநோய் மருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட Immunoglobulin எனும் ஆன்டிபயோடிக் மருந்து தொடர்பில் இரகசிய காவல்துறையினர் இன்னும் விசாரணைகளை நிகழ்த்தவில்லை.
இவ்வாறிருக்கையில் மீண்டும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து புற்றுநோய் மருந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மருத்துவத்துறை மீது அவநம்பிக்கையினை உண்டு பண்ணியுள்ளது.
இந்நிலையில், இதற்கும் தமக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மருந்துகளின் தரத்தை சரிபார்த்து அங்கீகாரம் வழங்குவதற்கு மாத்திரமே உரிமை இருப்பதாகவும், மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தமக்கு உரிமை இல்லை எனவும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், Immunoglobulin மருந்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான அனைத்து விவரங்களும் இரகசிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும் அவர்கள் விசாரணையை இதுவரை ஆரம்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சினால் குறித்த விநியோகஸ்தருக்கு செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.