இலங்கையில் பல இடங்களில் விஜயகாந்துக்கு அஞ்சலி(படங்கள்)
மறைந்த பிரபல தென்னிந்திய நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு இலங்கையின் பல இடங்களில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(28) காலை காலமானார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று(29) அரசு மரியாதையுடன் சந்தன பேழையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம்
அதே வேளை விஜயகாந்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் மறைந்த விஜயகாந்தின் திருவுருவபடத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மெழுகுவர்த்திகளால் தீபங்களும் ஏற்றப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றது.
வவுனியா
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு, மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அஞ்சலி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு மெழுவர்த்தி ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றது. நிகழ்வில் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு
விஜயகாந்த்க்கு மட்டக்களப்பு மக்கள் காந்தி பூங்காவில் மலர் தூபி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நேற்று(29) மாலை சரியாக 6:00 மணியளவில் ஒன்று திரண்ட மக்கள் தங்களது அஞ்சலிகளை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |