தமிழர் பிரதேசங்களில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
தமிழர் பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு (Batticaloa) மற்றும் சம்மாந்துறை (Sammanthurai) ஆகிய பிரதேசங்களில் இயங்கிய உணவகங்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு நாவற்குடா அபாது சுகாதார பகுதியிலுள்ள கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள், தீடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை நேற்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பகுதி
இந்தநிலையில், ரோல்ஸ், மரவள்ளிசீவல் மற்றும் வடை போன்ற உணவுகளை மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த பொருட்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்த ஐந்து கடைகளிலிருந்து உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தோடு, பல்பொருள் அங்காடி கடையான பூட்சிற்றி ஒன்றில் எலிகடித்த சீனி மூட்டையை விற்பனைக்கு வைத்திருந்த சீனி மூட்டையொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குல் செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பகுதி
மேலும், சம்மாந்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஐந்து உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தீடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் தயாரித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவை சோதனை மேற்கொள்ளப்பட்டு பாவனைக்கு உதவாத பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த சோதனையில் இனங்காணப்பட்ட ஐந்து உணவக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








