கொழும்பு பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை! இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு
கடந்த ஜூன் 14ஆம் திகதி காலி முகத்துவாரத்தில் நடைபெற்ற பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்வில் நிதி முறைகேடுகள் மற்றும் அரச ஆதரவு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, மக்கள் போராட்ட முன்னணி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளது.
இந்த முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய மக்கள் போராட்ட முன்னணி அமைப்பின் பிரதிநிதி துமிந்த நாகமுவ, முக்கியமாக வடக்கு மற்றும் மலைநாட்டு சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட சுமார் 5,000 பங்கேற்பாளர்களிடம், இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக தலா 5,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனத்தின் பெயரில் சாதனை
அத்துடன், பங்கேற்பாளர்கள் பின்னர் சான்றிதழ்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களுக்காகக் கூடுதல் பணம் செலுத்துமாறு கேட்கப்பட்டதாகவும், இது கொழும்புக்குப் பயணம் செய்த குடும்பங்களுக்குக் கணிசமான நிதிச் சுமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, ஒரு இலங்கை அரச நிறுவனத்திற்கோ அல்லது பங்கேற்பாளர்களுக்கோ கின்னஸ் உலக சாதனை கிடைக்கப் பெறாமல், இறுதியில் ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் கின்னஸ் உலக சாதனையைப் படைத்த இந்த நிகழ்வை அரசாங்கம் ஏன் ஆதரித்து ஊக்குவித்தது என்றும் நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
விசாரணை
மேலும், தனியாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்க அரசாங்க அமைச்சர்களும், அரச வளங்களும் ஏன் பயன்படுத்தப்பட்டன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ள மக்கள் போராட்ட முன்னணி, ஏதேனும் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் பங்கேற்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தைத் திருப்பித் தருமாறு ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தியுள்ளதுடன், இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் பங்கு குறித்து விளக்கமளிக்குமாறும் கோரியுள்ளது.
சங்கமம் 2026 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில், 4,988 நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்