சிங்கள பௌத்த தலைவர்களை அழிக்க கத்தோலிக்க திருச்சபை சதி : குற்றம் சாட்டும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
சிங்கள பௌத்த தலைவர்களை அழிக்கும் சதி திட்டத்தை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தீட்டி வருகிறாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பேராயரின் சில நடவடிக்கைகள் காரணமாக பௌத்த மக்களிடையே இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் புதிய பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம்
இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டங்களுக்கு பேராயர் முழு ஆதரவையும் வழங்கியதை காணக்கூடியதாக இருந்ததாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த போராட்டத்தின் மூலம் பௌத்த தலைவர் ஒருவர் பதவி நீக்கப்பட்டதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
இந்த பின்னணியில், தற்போது தேஷபந்து தென்னகோனின் நியமனத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை குரல் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தரை எதிர்க்கும் பேராயர்
புதிய பதில் காவல்துறை மா அதிபர் ஒரு பௌத்தர் எனவும் இதனடிப்படையில் அவருக்கு எதிராக பேராயர் கருத்து வெளியிடுகிறாரா என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் வரலாற்றில் கிறிஸ்தவ மற்றும் தமிழ் காவல்துறையினர் சேவையாற்றியிருப்பதை அனைவரும் நன்கு அறிந்திருப்பதாகவும், குறித்த தரப்பினரின் சேவைக்காலத்தின் போது, யாரும் இதனை எதிர்க்கவில்லை எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் சட்ட சிக்கல்கள் காணப்படுமாயின், நீதிமன்றின் மூலம் அதற்கு தீர்வு காண பேராயர் முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் புலம்பும் பேராயர்
மாறாக ஊடகங்களுக்கு குறித்த விடயத்தை கூறுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாக கொண்டு பேராயரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறிலங்காவின் புதிய பதில் காவல்துறை மா அதிபரின் நியமனம் தொடர்பில், கத்தோலிக்க திருச்சபையும் பேராயரும் நடந்து கொள்ளும் விதத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் சிங்கள பௌத்த தலைவர்களை அழிப்பது தொடர்பான சதித்திட்டத்தை குறித்த தரப்பினர் மேற்கொள்கிறார்களா எனும் சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலை புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான போராளி : எதிரியே பாராட்டும் தலைவர் என்கிறார் மனோ கணேசன்! (காணொளி)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |