போர் நிறுத்தம் முடிவு! உக்ரைனில் ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதல்
உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யப் படைகள் மீண்டும் உக்கிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் திங்கட்கிழமையுடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து இந்த தாக்கதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
வான்வழி குண்டுவீச்சு
இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு எட்டப்பட்ட இந்த தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை நீட்டிக்க உக்ரைன் முன்வந்த போதிலும், ரஷ்யா அதனை நிராகரித்து 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் உக்ரைனின் சிவிலியன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

Image Credit: TRT World
இதன்போது, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது மாதக் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கிரிவி ரிஹ் நகருக்கு வடகிழக்கே நடத்தப்பட்ட வான்வழி குண்டுவீச்சில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் பதிலடி
உக்ரைனின் தலைநகர் கிவ், செர்காசி, ஜைடோமிர் மற்றும் செர்னிஹிவ் போன்ற பல பகுதிகளிலும் இந்த ட்ரோன் தாக்குதல்கள் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக மைகோலைவ் பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக, உக்ரைனியப் படைகள் ரஷ்யாவின் எல்லையிலிருந்து சுமார் 1,500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஓரன்பர்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள எரிவாயு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |