ஓய்வுபெற விண்ணப்பித்த மின்சார சபை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் போது, தாமாக முன்வந்து ஓய்வுபெற (VRS) விண்ணப்பித்த ஊழியர்கள் தற்போது கடும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி பலமுறை ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாகவே தாம் இந்த நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அந்த ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 27 மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 01 ஆகிய திகதிகள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் இத்திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தல்
தற்போது வரை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகாததால், பெப்ரவரி 01 ஆம் திகதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் தவறிப்போகும் அறிகுறிகள் தென்படுவதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் தாமாக முன்வந்து ஓய்வுபெற விண்ணப்பித்த ஊழியர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்த நடவடிக்கையை விரைவுபடுத்தி மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை உடனடியாக அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமாக முன்வந்து ஓய்வுபெற விண்ணப்பித்த ஊழியர்கள் தற்போது நிதி மற்றும் சொத்து ரீதியான பாதிப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இழத்தல், அவற்றுக்கான விசா மற்றும் சட்ட ஆவணங்களின் காலம் முடிவடைதல், வீட்டுவசதி மற்றும் வதிவிடப் பிரச்சினைகள், உடல்நலப் பாதிப்புகள் மற்றும் நிறுவன ரீதியான முன்னேற்றம் தடைப்படுதல் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன், நிறுவனத்திற்குள் அவர்கள் மன உளைச்சலுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அந்த ஊழியர்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |