மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் - நீதியமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபரான அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ( Arjun mahendren) கைது செய்யும் முயற்சி கைவிடப்படவில்லை என்று நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவிக்கின்றார்.
சட்ட ரீதியாக அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் ஈடுபட்டு வருவதாக நீதி அமைச்சர் இன்று குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியில் கடந்த நல்லாட்சியின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி விற்பனை மோசடியில் வங்கியின் ஆளுநராக கடமைபுரிந்த அர்ஜுன மகேந்திரன் கடந்த 05 வருடங்களாக தலைமறைவாகவுள்ளார்.
அவரைக் கைது செய்ய சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு நீதியமைச்சர் அலிசப்ரி இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
“மத்திய வங்கி பிணை முறி மோசடி சம்பவத்தின் முதல் பிரதிவாதியான அர்ஜூன் மகேந்திரனை பலவந்தமாக இலங்கைக்கு கொண்டுவர முடியாது.
எவ்வாறாயினும், சட்ட ரீதியாக அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் சட்டமா அதிபர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும், இதுவரையில் சாதகமான பதில் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
இதனால் அர்ஜூன் மகேந்திரன் இன்றி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக” அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.