இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மறுவியூகத்தை வகுக்காதது ஏன்?
மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் பிணை முறி கடனை மீள செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முற்படாமலிருப்பது ஏன் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“இம்மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இம்மாத இறுதியில் செலுத்தப்பட வேண்டியுள்ள மொத்த கடன் தொகை 1.3 பில்லியன்களாகும். இவ்வாண்டு இறுதியில் 6.9 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் எஸ்.என்.பி. சர்வ தேச தரப்படுத்தல் நிறுவனத்தின் தரப்பட்டியலில் இலங்கை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன் தொகையை இலங்கையால் உரிய காலத்தில் செலுத்த முடியாது அல்லது அவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியாது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடன்களை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளோம் என்று அரசாங்கம் தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் செலுத்த முடியுமா என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.
சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீதுள்ள நம்பிக்கை மீண்டும் மீண்டும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கூட டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட கடன் மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முற்படாதது ஏன் என்பதே எமது கேள்வியாகும்.
ஒரு மக்கள் பாரதூரமான வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் முதலீட்டாளர்களும் கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைப்பதை வரவேற்கின்றனர். ஆனால் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அதற்கான நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன? கடன் மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிடம் கடன் தவணைகளை செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவிடமிருந்து வணிக கடன்களே அதிகளவில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இது மொத்த கடன் தொகையில் சுமார் 10 சதவீதம் மாத்திரமேயாகும். இதில் வட்டியின்றிய கடன் தொகையும் உள்ளடங்குகிறது. இவ்வாறு மிகக்குறைந்த கடன் தொகையை மீள செலுத்துவதற்கான காலத்தைக்கூட நீடிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருக்கிறார். இதே போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலீட்டாளர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் , மத்திய வங்கி ஆளுனர் மாத்திரம் பிணைமுறி கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைக்க முடியாது என்று கூறுவதற்கான காரணம் என்ன? செலுத்தப்பட வேண்டியுள்ள 500 மில்லியன் டொலர் பிணை முறி கடனில் 170 மில்லியன் உள்நாட்டு கடன் என்று கூறப்படுகிறது.
அவ்வாறெனில் அந்த உள்நாட்டு கடன் வழங்குனர்கள் யார்? இதில் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர் உள்ளனரா? அதன் காரணமாகவா இந்த கடனை செலுத்தியே தீருவோம் என்பதில் மத்திய வங்கி ஆளுனர் பிடிவாதமாகவுள்ளார்? பிணைமுறி கடனை மீள் செலுத்துவதற்கான மறுவியூகமொன்றை அமைத்தால் சர்வதேச நிறுவனங்களில் தரப்பட்டியலில் முன்னேற்றமடைய முடியும். அவ்வாறில்லை எனில் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியாது” என்றார்.