டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு: மத்திய வங்கி அறிக்கை
கடந்த ஆறு மாதங்களில் டொலருக்கு (dollar) நிகரான ரூபாவின் பெறுமதி 7.3% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் மே மாதத்தில் மாத்திரம் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக மத்திய வங்கி (central bank of srilanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை ரூபாயின் மதிப்பு சடுதியாக அதிகரித்து காணப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு
இந்நிலையில் மே மாதத்தில் ரூபாயின் பெறுமதி 1.7 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மே மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.4 பில்லியன் டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 400 ரூபாவை எட்டியிருந்தது. எனினும் அதிகளவான டொலரின் உள்வருகை காரணமாக டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை அண்மித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு
இதேவேளை, இலங்கை தனது கடனில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனான கடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.
இந்த கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் இலங்கைக்கும் சீனாவுக்கும் (China) இடையில் கொழும்பில் (Colombo) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் பணவீக்கம்
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்திற்கான நுகர்வோர் பணவீக்க வீதத்தை ஜூன் 2024 மாதத்திற்கான வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஜூன் மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 1.7% ஆக அதிகரித்துள்ளது. இது மே 2024 இல் 0.9% ஆக பதிவு செய்யப்பட்டது.
மேலும், உணவு அல்லாத வகையிலான ஆண்டு பணவீக்கம் மே 2024 இல் 1.3% இலிருந்து ஜூன் 2024 இல் 1.8% (புள்ளி) ஆக அதிகரித்துள்ளது.