விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் - இந்திய மத்திக்கு அழுத்தம்
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கும் - இந்திய மத்திக்கு அழுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.
இந்தியாவின் தலைநகர் டில்லிக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர், அங்கு பாரதிய ஜனதாக் கட்சி உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மாநாடு ஒன்றினையும் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் தமது இந்திய பயணத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்தாக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
புதுடெல்லியில் ஈழத் தமிழர் மாநாடு
இந்தியாவில் 1991 ஆம் ஆண்டில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய மண்ணில் எந்த செயற்பாட்டையும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஈழத் தமிழர்களின் அண்டை நாடான இந்தியாவின் இத்தடையானது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிகவும் பாரதூரமான பின்னடைவாக கூறப்படுகிறது.
இந்தத் தடையானது விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் ""ஒரு செயல் அது தரவல்ல விளைவுகளின் அளவிலிருந்து தான் அச்செயல் பற்றி எடை போடப்பட வேண்டும்"" என்பதைக் கருத்தில் கொண்டு நோக்கினால் விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடையானது உண்மையில் ஈழத் தமிழர் யாவரும் அந்தத் தடையின் கட்டுக்குள் அடங்கி அடக்கப்பட்டதாகவே நடைமுறையில் செயற்பட்டதைக் காணலாம்.
ஈழத்தமிழர், தமிழீழம். விடுதலைப் புலிகள், என்ற சொல்லாடல்களை பயன்படுத்தி இந்திய மண்ணில் மாநாடுகளையோ, கூட்டங்களையோ அல்லது பேச்சுக்களையோ சட்டபூர்வமாக நடத்த முடியாத ஒரு இறுக்கமான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.
ஈழத் தமிழர்களின் அரசியல் மைல்கல்
இத்தகைய பின்னணியில் இலங்கை அரசாங்கம் இந்திய மண்ணில் ஈழத் தமிழர்கள் சார்ந்த கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்த முடியாது என்ற நம்பிக்கையில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இருந்த நிலையில், இம்மாதம் ஒக்டோபர் 10ஆம் திகதி புதுடெல்லியில் ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினை சார்ந்து ஒரு பொதுக் கூட்டத்தை ஈழத் தமிழர்கள் பல்வேறுபட்ட சாத்தியமான வழிகளை மிக நுணுக்கமாக கையாண்டு இன்றைய உலகளாவிய அரசியல் போக்கு மாற்றத்தினை கவனித்து அதற்கு ஏற்ற வகையில் இந்திய அரசின் அனுமதி பெற்று இந்த ஈழத்தமிழர் மாநாட்டினை டெல்லியில் நடத்தி முடித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களையும் தாயகத் தமிழர்களையும் கலந்து கொள்ளும்படி மாநாட்டு குழுவினரால் பகிரங்க அழைப்பும் விடப்பட்டது.
உண்மையான இலட்சியப் பற்றுள்ள தமிழர் நலன் சார்ந்த நபர்களும் அமைப்புகளும் இந்த மாநாட்டு அழைப்பின் பிரகாரம் டெல்லியில் ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடி எந்த தடைகளும் இன்றி நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் இந்திய அரசு சார்ந்த பிரமுகர்களும் இந்திய அரசியலை நிர்ணயம் செய்கின்ற பல்வேறுப்பட்ட அமுக்க குழுக்களின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள் பலரும் கலந்துகொண்டு இந்திய முக்கிய பிரமுகர்களுடன் தமது நிலைப்பாடுகள் பற்றியும் எதிர்கால இந்து சமுத்திரம் பாதுகாப்பு பற்றியும் பேசினர் என்பதும் இங்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும்.
