தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயித்தே குறித்த வர்த்தமானி தொழில் அமைச்சரின் செயலாளரினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிவருகின்றனர்.
எனினும் அந்த கோரிக்கை இழுத்தடிப்பு செய்யப்பட்ட நிலையில் கோட்டா மஹிந்த அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியிலும் அதேபோன்று 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் 1000 ரூபா சம்பள உயர்வு திட்டத்தை முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய பல சுற்று பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு சம்பள நிர்ணயச் சபை இணக்கம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானமானது மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் செல்லுபடியாக வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவாகவும் வரவு - செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.