அரசின் அடக்கு முறைக்கு எதிராக எமது போராட்டம் தொடரும்!
முல்லைத்தீவு கேப்பாபிலவு வான்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரும், தனிமைப்படுத்தலிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியேறிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தங்களது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களைத் தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், ஆசிரியர் சங்கங்கள் இணையவழி கற்பித்தலைப் புறக்கணித்து தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
இதையடுத்து, 8 நாட்களின் பின்னர், நேற்று மாலை அவர்கள் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.