தமிழக வீரர் அசத்தல் : நியூஸிலாந்தை சுருட்டியது இந்தியா
சாம்பியன்ஸ் கிண்ண தொடரில்(icc champions trophy) நியூசிலாந்து அணிக்கு(new zealand cricket team) எதிரான இன்றைய(02) போட்டியில் இந்திய அணி(india cricket team) 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
டுபாயில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சொதப்பிய ஆரம்பவீரர்கள்
தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 2 , அணித்தலைவர் ரோகித் சர்மா 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 11 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, அவர் அடித்த பந்தை அந்தரத்தில் ஒற்றைக்கையில் பிடித்து ஆட்டமிழக்கச்செய்தார் நியூசிலாந்து வீரர் கெலென் பிலிப்ஸ்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் நிதானமாக விளையாடினார். ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து 79 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 42 , கே.எல்.ராகுல் 23, ரவிந்திர ஜடேஜா 16 , ஹர்திக் பாண்டியா 45, ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற 250 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கலக்கிய தமிழக வீரர்
இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 6 ,வில் யங் 22 , மிச்சல் 17 , டொம் லாதம் 14 , பிலிப்ஸ் 12, பிரேஸ்வல் 2 ஓட்டங்களில்ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கேன் வில்லியம்ஸ் 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ஓட்டங்களை சேர்த்த அணித்தலைவர் மிச்சல் சான்ட்னர் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 45.3 ஓவரில் நியூசிலாந்து அணி 203 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபாரமாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்த தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி 4ம் திகதி துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
