கிரிக்கெட் விளையாடிய மகிந்த
மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப் போட்டி இன்று (12.08.2023) நுவரெலியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுமுடிந்தது.
வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இவ்வருடமும் முன்னாள் அதிபரும் , முன்னாள் பிரதமருமான , நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.
மஹிந்த ராஜபக்சஷ , நாமல் ராஜபக்ஷ , நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட , நுவரெலியா சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அனுருத்த ஹக்மான உள்ளிட்டோர் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த போட்டியில் பங்குபற்றுவதற்காக கலந்துகொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியே வெற்றி
இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இரண்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் இரண்டு போட்டிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியே வெற்றிபெற்றது.

போட்டியின் நாயகனாக நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷானும் , சிறந்த காப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்கவும் , சிறந்த துடுப்பாட்ட வீரராக நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்கவும் , சிறந்த பந்துவீச்சாளராக பிரேமலால் ஜயசேகரவும் தெரிவு செய்யப்பட்டனர்.