இவர்கள் மண் மாபியாக்களை இயக்குவதை தவிர மட்டக்களப்பிற்கு என்ன சேவை செய்துள்ளனர்?
சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம்தம்பிமுத்துவின் வீட்டையே தங்களது வீடு என்று கூறுகின்றவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரியவிடமில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குபட்ட நரிப்புல் தோட்டத்திலுள்ள முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் முகமாக மீன்பிடிக்கான தோணி மற்றும் வலை வழங்கி வைக்கப்பட்டது இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த நல்லாட்சி என்று கூறப்படுகின்ற 2015 தொடக்கம் 2020 ஆண்டு காலப்பகுதியிலே உங்களுடைய பிரதேசத்திலேயே நாங்கள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து இருந்தோம்.
உண்மையிலே இன்று நடந்து கொண்டிருக்கின்ற வீதி புனரமைப்பு திட்டமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேடமான வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு கிழக்கில் இருக்கும் 80 வீதமான பாதைகளை புனரமைக்காக 2016ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
10வருட திட்டம் 2025 ஆம் ஆண்டளவில் குறைந்தளவிலான வீதியே புனரமைக்கப்படும் நிலையிருக்கும். இந்த திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் நாங்களும் எங்களால் செய்யக்கூடிய பங்களிப்பை நிச்சயமாக செய்வோம்.
இன்று எமது சமூகத்தை பொறுத்தவரையிலே அரசியல் ரீதியாக ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஏனென்றால் இனிமேல் எதிர்காலம் என்பது வெறுமனே பாதைகள் புனரமைப்பு மற்றும் ஆலயங்களை புனரமைப்பதோ அல்ல. இந்த நாட்டிலேயே தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை அமைய வேண்டும்.
விஷேடமாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புள்ளவர்கள் அதிகளவானோர் காணப்படுகின்றனர். அதிகளவான மாவீரர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் அவர்களுடைய உயிரை அர்ப்பணித்தது இந்த ஆலய புனரமைப்புக்கோ வீதி புனரமைப்புக்கோ அல்ல.
தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்ததற்கான காரணம் எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக. அது எங்களுடைய ஒரு போராட்டத்தின் வடிவமாக இருந்தது ஆயுதப்போராட்டம். 2009ஆம் ஆண்டிற்கு பிற்பாடு எமது போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் அப்படியான அரசியல் உரிமைகளைப் பற்றி பேசுபவர்களை இன்று அரசாங்கம் தொடர்ந்து அச்சுறுத்தி கொண்டிருக்கின்றது. இன்று வரைக்கும் எமது மாவட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறு என்ன முகநூலில் விடுதலைப்புலிகள் தொடர்பான பதிவுகளை இட்டது என்கின்ற காரணத்திற்காக அவர்களை சிறையில் வைத்து இருக்கின்றார்கள்.
வரும் காலங்களில் விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டது என்பதற்காக எங்களுடைய தமிழ் மக்களுடைய அரசியல் ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டவில்லை. எங்களுடைய அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும். சிறையிலிருக்கும் அரசியல் கைதிகள் கற்பழித்து, கொலை, செய்து தனிப்பட்ட காரணத்துக்காகவோ மண் மாபியா போன்ற விடயங்களை ஆதரித்து சிறையில் இருக்கவில்லை.
அவர்கள் சிறையில் இருக்கின்றார்கள் என்றால் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து இனத்தின் விடுதலைக்காக போராடியது தான். அதனை நீங்கள் ஒரு குற்றமாக ஏற்றுக் கொள்கிறீர்களா? என்னைப் பொறுத்தளவில் நாங்கள் இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் தங்களுடைய தனிப்பட்ட லாபத்திற்காக போராடியவர்கள் இல்லை.
இவ்வாறான நிலைமை காணப்படுகின்ற போது மக்கள், சாணக்கியன் எமக்கு விடுதலை தேவை இல்லை, அரசியல் உரிமை தேவை இல்லை, எங்களுக்கு கொங்கிறீட் பாதை மாத்திரம்தான் தேவை, நீங்கள் தமிழ் அரசியல் கைதிகளை சப்பாத்தை நக்கச் சொன்ன இராஜாங்கம் அமைச்சருக்கு பக்கத்தில் போய் இருங்கள் என்று கூறுவார்களாக இருந்தால் அவ்வாறான அரசியலை விட்டு நான் ஒதுங்குவேன்.
இன்று அந்த வீதிகள் புனரமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திகள் நடைபெறுவதாக இருந்தால் அது அரசாங்கத்தின் நிதி. அது தனியார் நிதி அல்ல. நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்றால் எங்களுக்கும் அதை தரத்தான் வேண்டும். சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட் வீட்டுத்திட்டங்கள் பூர்த்தியடையாமல் உள்ளன.
இந்த வீட்டுத் திட்டங்களை முடித்து தருமாறு கேட்டால் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நேரடியாக சொன்னார் நாங்கள் அதனை முடித்து தர மாட்டோம். ஏனென்றால் வடக்கு கிழக்கில் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன, தெற்கில் இருக்கின்ற மக்களைவிட அங்குதான் அதிகளவாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் நாங்கள் முடித்து தர மாட்டோம் என கூறுகின்றார்.
இந்த மாவட்டத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை அபிவிருத்திக்கென தெரிவு செய்திருக்கின்றார்கள. மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலங்களுக்குப் பிறகு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் வரவில்லையா.
சஜித் பிரேமதாசவின் வீட்டுத்திட்டத்தில் ஏதேனும் ஒரு வீடாவது முடித்து காட்டியதுண்டா. வடக்கு கிழக்கில் ஒரு தமிழர்களுடைய ஒரு வீடேனும் முடித்து தருவதாக இல்லை. ஆனால் புதிதாக, ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு என்ற வீதியில் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு வீடு வழங்குகின்றார்கள். இந்த நிலையில் ஒரு லட்சம் ரூபாய் நிதி இல்லாமல் இருக்கின்ற அவர்களின் வீட்டினை முடித்துக் கொடுத்து இருக்கலாம் தானே.
ஆனால் இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயல்படும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு விடயங்களை மாத்திரம் செய்து கொண்டிருக்கின்றார்கள் தாங்களும் தங்கள் சார்ந்தவர்களுடைய தொழில் வாய்ப்புகளை தங்களுடைய வருமானங்களை அதிகரித்துக் கொண்டு போகின்றார்கள் இதுதான் நடக்கின்றது.
இந்த மண் வியாபாரிகள் இரண்டு பேரும் நேற்றைய தினம் இன்றைய தினம் ஊடக மாநாட்டினை நடத்தி கூறியிருக்கின்றார்கள் தங்களுக்கும் இந்த மண் அனுமதி பத்திரத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை வேறு வேறு பெயர்களில் இருக்கின்றது இதுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கூறி இருக்கின்றார்கள்.
மண் மாபியாக்களை இயக்குவதை தவிர இவர்கள் இந்த மாவட்டத்திற்கு செய்த சேவையினை சொல்லுங்கள். நான் நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்களுக்கு ஆளுக்கு ஆள் மாறி மாறி ஊடகசந்திப்புகளை நடாத்தி தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லையென கூறியுள்ளனர்.
இதனை கூறுகின்றவர்கள் தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண்தம்பிமுத்துக்கு சொந்தமான வீட்டினை தங்கள் வீடு என சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருக்கின்றது.
இவற்றையெல்லாம் மாற்றும் அவர்களுக்கு அனுமதி பாத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்லை. ஒருவரின் பரம்பரை சொத்தை தங்களது சொத்து என கூறுகின்றனர் இவர்களுக்கு மண் அனுமதிப்பத்திரங்களில் பெயர் மாற்றுவது பெரியவிடமல்ல. எமது பகுதிகளில் உள்ள வளங்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
மங்கலகம,கெவிலியாமடு ஆகிய பகுதிகளில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு மூன்று ஏக்கர் வீதம் அரச காணிகள் வழங்கப்படுகின்றது. ஏனைய மாவட்டங்களிலிருந்து அழைத்து வந்தவர்களுக்கு இதனை வழங்குகின்றனர். இதனையே இந்த அரசாங்கம் செய்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
