பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம் மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் அரசியல் நாடகம்!
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆயிரம் தேசிய பாடசாலைகள் அபிவிருத்தி திட்டமானது மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் ஓர் அரசியல் நாடகமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆயிரம் தேசிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னதாக, ஏற்கனவே தேசியப் பாடசாலைகளாக இருக்கும் பாடசாலைகளுக்குப் போதிய வளங்களை வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன்(Rasamanickam Chanakyan) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தலைமையில் இன்று கூடிய நிலையில், நாளாந்த கடமைகளின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது இரா.சாணக்கியன் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha), இது அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு அல்ல எனவும், இது அரசாங்கத்தின் 1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யும் திட்டமிடப்பட்ட செயற்பாடு எனவும் தெரிவித்தார்.